ஸ்வப்னா சுரேஷ் வாக்கு மூலம்... முதல்வருக்கு சிக்கல்! 1635368160
ஸ்வப்னா சுரேஷ் வாக்கு மூலம்... முதல்வருக்கு சிக்கல்!
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்லிட்டோர் சிக்கினர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த என்ஐஏ, உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, ஸ்வப்னா சுரேஷை 2020 ஜூலை மாதம் பெங்களூருவில் கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் ஸ்வப்னா சுரேஷ் பணியாற்றி வந்த நிலையில், இந்தக் கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதற்கிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார்.தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முக்கியமான இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி மற்றும் மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது என்று தமது வாக்குமூலத்தில் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளதாக தெரிகிறது. ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்கு மூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment