\"என் குழந்தைகள், மனைவியை நினைத்து 3 மணிநேரம் கதறி அழுதேன்\" - நினைவுகள் பகிர்ந்த சஞ்சய் தத்
\"என் குழந்தைகள், மனைவியை நினைத்து 3 மணிநேரம் கதறி அழுதேன்\" - நினைவுகள் பகிர்ந்த சஞ்சய் தத்
கே.ஜி.எஃப்-2 படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் (62), கடந்த 2020-ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாகச் சிகிச்சைப் பெற்று தற்போது குணமடைந்துள்ளார். இதனால் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
கடந்த வாரம் இவர் நடித்த கே.ஜி.எஃப்-2 படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அண்மையில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தபோது தனது குழந்தைகள் மற்றும் மனைவியின் வாழ்க்கையை நினைத்துக் கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் கதறி அழுதேன் என்றும் அதை தான் எப்படி எதிர்கொண்டு மீண்டு வந்தேன் என்றும் கூறியுள்ளார்.
இது பற்றி கூறிய அவர், "நான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டேன் என உறுதி செய்தவுடன் என் மனைவி மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை எண்ணி கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் கதறி அழுதேன். பின்னர் எனக்கு முடி உதிர்வது மற்றும் பிற விஷயங்கள் நடக்கும், வாந்தி எடுப்பேன் என்று மருத்துவர்கள் என்னிடம் சொன்னார்கள். அப்போது நான் எனக்கு எதுவும் ஆகாது என்று நம்பிக்கையாக மருத்துவரிடம் சொன்னேன்.
அதன் பின் நான் என் ஹீமோதெரபி செய்தேன், சைக்கிள் ஓட்டினேன், பேட்மிண்டன் மைதானத்திற்குச் சென்று இரண்டு-மூன்று மணி நேரம் விளையாடுவேன். இதை நான் தொடர்ந்து செய்தேன். திரைப்படங்கள் நடிப்பதைத் தள்ளிவைத்துவிட்டு சிகிச்சை எடுத்து வந்தேன். அந்த நாட்கள் எனக்கும் என் குடுபத்திற்கும் மிகவும் கடினமான நாட்கள். கடவுள் வலிமையான மனிதர்களுக்குத்தான் இப்படியான சோதனைகளைக் கொடுப்பார். நான் அதை எதிர்த்துப் போராடி இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். என் குழந்தையுடைய பிறந்தநாளின் சிறந்த பரிசாக நான் எனது ஆரோக்கியமான உடல்நலத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளேன்." என்று கூறினார்.
Comments
Post a Comment