போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் பேச்சில் உடன்பாடு உக்ரைன் நம்பிக்கை
போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் பேச்சில் உடன்பாடு உக்ரைன் நம்பிக்கை
போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் காணொலி மூலம் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றுகையில், ‘‘ரஷ்யாவின் கோரிக்கைகள் யதார்த்தமானது. ஆனால், இதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த ஒரு போருக்கும் ஒப்பந்தத்தின் மூலமே தீர்வு காண முடியும்,’’ என்றார்.
3 நாட்டு பிரதமர்கள் பத்திரமாக திரும்பினர்: கீவ் நகரத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் தொடர்ந்து வேகமாக முன்னேறிய நிலையில், அடுத்த சில நாட்களில் இந்த நகரம் வீழ்ந்து விடும் என கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளான போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியாவின் பிரதமர்கள் கீவ் நகருக்கு உயிரை பணயம் வைத்து சென்றனர். அவர்கள் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிவிட்டு, நேற்று நாடு திரும்பினர். செக் குடியரசு பிரதமர் பெட்டர் பியாலா கூறுகையில், ‘உக்ரைனுக்கு உலக நாடுகள் உடனடியாக அதிகளவில் ஆயுதங்களை கொடுத்து உதவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் படை நமது நாடுகளின் சுதந்திரத்துக்காகவும் சண்டையிட்டு வருகிறது என்பதை உணர வேண்டும். எனவே, அந்த நாட்டை ஆதரிக்க வேண்டும்,’’ என்றார்.
கடற்படையும் களமிறங்கியது: உக்ரைன் போரில் ஏற்கனவே விமானப்படை, தரைப்படை, பீரங்கிப் படை போன்றவற்றை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் முறையாக அது கடற்படையை பயன்படுத்தியது. ஒடிசே நகரத்தின் தென் பகுதியில் உள்ள துஷ்லா நகரத்தின் மீது அசோவ் கடலில் நிறுத்தப்பட்டுள்ள போர்க்கப்பலில் இருந்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதேபோல், கருங்கடலில் முற்றுகையிட்டு உள்ள போர்க்கப்பல்களில் இருந்து மரியுபோல் நகரத்தின் கடற்படை பகுதிகள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
Comments
Post a Comment